சிவகங்கை, ஆக. 12 –
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவானது சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தது. அப்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்பு அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நான் கடந்த முறை இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்ட போது சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவை செயல்படாமல் இருந்தது. அப்போது இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் விரைந்து சரிசெய்து விடுவதாக உறுதி கூறியிருந்தார்.
ஆனால் அவை இன்று வரை சரி செய்யப்படாமல் இருக்கிறது. இப்போது வந்துள்ள புதிய மருத்துவமனை முதல்வர் அவற்றை சரி செய்ய பணிகள் நடந்து வருவதாகக் கூறுகிறார் . அவற்றை நானும் பார்வையிட்டேன். தமிழக அரசு இப்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் சிடி ஸ்கேனும் 7 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேனும் கொள்முதல் செய்துள்ளது. இவை விரைந்து இணைக்கப்படும். மேலும் இந்த மருத்துவமனையில் கார்டியாஸிஸ்ட் டாக்டர் இல்லை என கூறப்பட்டது. எனவே மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வர் இன்னும் 15 தினங்களுக்குள் மருத்துவமனையில் உள்ள டாக்டர்களின் குறைவு, பணியாளர்கள் குறைவு மற்றுமுள்ள இதரக் குறைபாடுகள் குறித்து எங்கள் குழுவிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இந்த மருத்துவமனையில் நாங்கள் பார்க்கும் போது மாடுகள் தாராளமாக திரிகின்றன. இங்குள்ள மருத்துவக் கழிவுகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அந்த மாடுகள் தின்னும் போது நான் பார்த்தேன். இது போன்ற மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ள மருத்துவமனை நிர்வாகம் இன்னும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை. இவற்றை சரி செய்ய இந்த குழு உத்தரவிட்டு உறுதி மொழி கூறுகிறது என்றார்.
இதன் பின்பு சட்டமன்றக் குழுவானது சிவகங்கையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருதுபாண்டியர்களின் சிலை அமைவிடம், பைபாஸ் சாலையின் பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தது. இதன் பின்பு தங்களின் ஆய்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



