சிவகங்கை, ஜூன் 28 –
சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வாழ்வாதார 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்டத் தலைநகர் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
வருவாய்த்துறையின் 7 அம்ச கோரிக்கைகள் : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணிப்பாதுகாப்பு அளித்திடுமாறு, வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிட சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
*பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்பிட வேண்டும்.
*வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுவது தொடர்பாக, குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வது தொடர்பாக, ஏற்கனவே அரசு செயலாளர் அவர்களிடம் முறையீடு அளித்துள்ள நிலையில் அதற்கான தீர்வினை விரைந்து வழங்க வேண்டும்.
*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
*தமிழக அரசுத் துறைகளில் 25% பணியிடங்கள் கருணை அடிப்படை நியமனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி கருணை அடிப்படை பணிநியமனத்திற்கான உச்சவரம்பு 25% லிருந்து 5% ஆக குறைத்து மறுநிர்ணயம் செய்து புதியதாக அரசாணை வெளியிடப்பட்டு, கருணை அடிப்படை பணிநியமனம் வழங்குவதில் மிகுந்த தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தின் சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு உச்சவரம்பு 5 % என குறைந்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்து மீண்டும் 25 % உயர்த்தி வழங்கிடவும் கிராம உதவியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடங்களை வழங்க வேண்டும்.
*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும் வெளி முகமை தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். மேலும் அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
*ஒவ்வொரு வருடமும் ஜூலை 1-ம் நாளில் (பசலி ஆண்டின் தொடக்கம்) வருவாய் துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும். மேலும் பொது மக்களுக்கு அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களின் தன்னலம் கருதா பணியை அங்கீகாரம் செய்யும் வகையில் மாநில அளவில் அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.