நாகர்கோவில், செப்டம்பர் 23 –
குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தில் பைக் குகளை மிக அதிவேகத்தில் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஸ்டாலின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சாலை விதிகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இளைஞர்கள் விலை உயர்ந்த பைக்குகளை கண்டபடி ஓட்டி வருகின்றனர். மேலும் அவர்களது நண்பர்கள் செல்போன்களில் படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.
இதற்கிடையே போலீசார் நடவடிக்கைக்கு கொஞ்சமும் பயம் இல்லாமல் தொடர்ந்து இளைஞர்கள் கிராமப்புற சாலைகளை மையமாகக் கொண்டு வேகமாக சென்று ரீல்ஸ் எடுத்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அது போல் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இளம் பருவம் என்பதால் சாலை விதிகளும் தெரிவதில்லை. அவர்களது உயிரின் மதிப்பும் தெரியாமல் பைக்குகளை சாலைகளில் கண்டபடி ஓட்டி வருகின்றனர். இது தொடர்பாக குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன் தினம் மட்டும் கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் 9 சிறுவர்கள் ஓட்டி வந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
வடசேரி போலீசார் ஒரு சிறுவனின் பைக்கையும், கோட்டார் போலீசார் ஒரு சிறுவனின் பைக்கையும் பறிமுதல் செய்தனர். பைக்கை பறிமுதல் செய்ததோடு சிறுவர்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் வடசேரியில் சிக்கிய சிறுவன் 13 வயதை நிரம்பியவன். சிறுவர்கள் பைக்கில் வரும்போது அசம்பாவிதங்கள் நடக்கும் போது குடும்பங்கள் சிதைந்து விடும். இதனை மனதில் வைத்து சிறுவர்கள் பைக் ஓட்டி செல்வதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்கள் கேட்கும் பைக்குகளை உடனடியாக வாங்கிக் கொடுக்கக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இதுபோன்று சிறுவர்கள் தொடர்ந்து பைக்குகளை ஓட்டி வரும்போது அபராதம், பெற்றோர் மீது வழக்கு, என பல நடவடிக்கை பாயும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



