நாகர்கோவில், மார். 9-
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன் திட்டம், மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்திய பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா கலந்துகொண்டு, தேர்வு பெற்றவர்களுக்கு நேற்று மகளிர் தினத்தில் பணி ஆணை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடைபெற்றது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் டாடா பவர் சோலார் திருநெல்வேலி நிறுவனம் பயிற்சி , பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவன பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், பி.எஸ்.சி படிப்பை முடித்த பெண்கள் கலந்துகொண்டார்கள். இதில் 65 பெண்கள் பணி ஆணை பெற்றார்கள். அனைவருக்கும் இனிய மகளிர் தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மனித வள மேலாளர் காமாட்சி, உதவி இயக்குநர் திறன்பயிற்சி லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர்கள் ராகுல், ஜிஜின் துரை, மாணவ மாணவியர்கள், இளம்பெண்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



