நாகர்கோவில், ஆகஸ்ட் 6 –
சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத நபர்களுக்கு கொடுக்கும் லைக் உங்கள் வாழ்க்கையை திசை மாற்றுவதாக அமையும் என்று எஸ்.பி. ஸ்டாலின் கூறினார்.
நாகர்கோவிலில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: தற்போதுள்ள இளம் பெண்கள், இளைஞர்கள் எளிதில் வெற்றி கிடைக்க வேண்டும். அதுவும் உடனே வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அவ்வாறு வெற்றி இல்லாமல் தோல்வி ஏற்பட்டால் மனம் துவண்டு விடுகிறீர்கள். இந்த தோல்விக்கு காரணமாக பிறரை குறிப்பாக பெற்றோர், கல்வி நிறுவனங்களை குற்றம் சாட்டுகிறீர்கள். தோல்வியை தன்மானத்துடன் ஒப்பிடாதீர்கள். அவ்வாறு தன்மானத்துடன் தோல்வியை ஒப்பிட்டால் நீங்கள் எளிதில் வெற்றி பெற முடியாது. தோல்வி என்பது நிரந்தரமல்ல. தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர வேண்டும்.
தற்போது அனைவரும் சமூக வலைத்தள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சமூக வலைத்தளம் தான் எல்லாம் என்று எண்ணுகிறீர்கள். முகம் தெரிந்த உறவுகள், நட்புகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத நட்புகளுக்கு கொடுக்கிறீர்கள். குறிப்பாக இளம் பெண்கள் சமூக வலைத்தளங்களில் தாங்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு யாராவது ஒருவர் லைக் கொடுத்து மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினாலே ஒரு புகழ்ச்சிக்கு தன்னை அடிமையாக்கி கொள்கிறீர்கள். அழகு என்பது நிரந்தரமல்ல. அறிவு தான் நிரந்தரம். அழகு மாறக்கூடியது. ஆனால் அறிவு என்றுமே மாறாதது. எனவே அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத ஒருவரிடம் நட்பு ஏற்படுத்த நீங்கள் கொடுக்கும் லைக் உங்கள் வாழ்க்கையை திசை திருப்பி விடும். சின்ன, சின்ன தவறுகள் கூட மிகப் பெரிய விளைவுகளை உண்டாக்கி மனரீதியாக உங்களை முடக்குவதுடன் உங்கள் குடும்பங்களையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அவ்வாறு ஏற்படும் அந்த பாதிப்பு உங்கள் வாழ்வில் கடைசி வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
எனவே சமூக வலைத்தளங்களில் தேவை இல்லாத வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவதை தவிர்த்து முகம் தெரியாத நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல நண்பர்கள், தோழிகளை தேர்வு செய்து தைரியம் தன்னம்பிக்கை கொண்டவர்களாக செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.