தஞ்சாவூர், ஜூலை 25 –
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தஞ்சாவூர் தொகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற பிரச்சார பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சாவூர் காந்திஜி ரோட்டில் பிரச்சார பஸ்ஸில் நின்றபடி எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: இன்றைய முதலமைச்சர் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும் திமுக நிர்வாகிகளும், திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஏதோ நாடாளுமன்ற தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தல் தானே வர இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதை போல பா. ஜனதாவை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவை விமர்சனம் செய்ய ஏதுமில்லை. டெல்டா மாவட்டம் எங்கள் கோட்டை என ஸ்டாலின் பேசுகிறார்.
டெல்டா மாவட்டம் அதிமுக கோட்டை. இந்த எழுச்சி பயணத்தில் கலந்து கொண்ட மக்கள் எழுச்சியை சாட்சி. இங்குள்ள பொறுப்பு அமைச்சர் டெல்டா மாவட்டம் எங்கள் கோட்டை என்றார். அந்த கோட்டையை தூள் தூளாக நொறுக்கப்பட்டு விட்டது. அதிமுகவின் கோட்டை வெற்றி கொடி நாட்டப்பட்டுவிட்டது.
மு.க. ஸ்டாலின் அவர்களே அதிமுகவை உடைக்க எத்தனையோ அவதாரம் எடுத்துப் பார்த்தீர்கள், அத்தனை அவதாரமும் மக்கள் தொண்டர்கள் உதவியுடன் தூள் தூளாக்கப்பட்டது. நான் ஒரு விவசாயி ஒரு விவசாயி நாட்டை ஆளக்கூடாதா? முதலமைச்சராக வரக்கூடாதா? முதலமைச்சர் பதவி ஸ்டாலின் குடும்ப சொத்தா? அவர் குடும்பத்தினர் தான் கட்சி பொறுப்பில் இருப்பார்கள். முதலமைச்சர் பதவிக்கும் வருவார்கள். தமிழ்நாடு என்ன திமுக குடும்பத்திற்கு பட்டா போட்டு கொடுத்து இருக்கிறதா? அதிமுகவுக்கு யார் விசுவாசமாக இருக்கிறார்களோ யார் உழைக்கிறார்களோ அவர்கள் தானாக வளரக்கூடிய கட்சி அதிமுக.
திமுகவில் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுக மன்னராட்சி கொண்டுவர துடிக்கிறது. குடும்ப ஆட்சி தேவையா? வாரிசு அரசியல் வேண்டுமா? இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேர்தல் 2026 சட்டசபை தேர்தல் இந்தத் தேர்தலோடு திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
திமுகவை பொருத்த வரையில் கட்சியில் உழைப்பவர்களுக்கு அங்கே இடம் இல்லை. உதயநிதி எத்தனை போராட்டத்தில் கலந்து கொண்டார். எத்தனை முறை சிறைக்கு சென்றார். குடும்ப உறுப்பினர்களுக்கு தான் அங்கே இடம். அதிமுகவை பொருத்தவரை உழைப்பவர்களுக்குத்தான் முதலிடம். அதிமுக பா ஜனதா கூட்டணி வைத்ததிலிருந்து ஸ்டாலின் அப்செட் ஆகிவிட்டார். தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.
இன்றைய திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் எதிர்க்கட்சியில் இருக்கிறார்களா? ஆளுங்கட்சியில் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து கொண்டு மக்கள் பிரச்சினையை பேசாமல் மௌனமாக இருந்தால் அது எதிர்க்கட்சி அந்தஸ்து உண்டா? மக்கள் பிரச்சினையை பேசுவதற்கு தான் எதிர்க்கட்சி. தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக. இன்றைய திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் திமுகவுக்கு சட்டசபையிலும், சரி வெளியிலும் சரி, ஜால்ரா அடிப்பதோடு சரி வேறு எதுவும் கிடையாது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் கட்சி தொடங்கியது எதற்காக மக்கள் சேவை செய்வதற்காகத் தான். மக்கள் பிரச்சினை வருகின்ற போது மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்களுக்காக போராட வேண்டும்.
இப்போது உங்களுக்கு தெரியாது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற சட்டசபை தேர்தலில் மக்களை போய் சந்திக்கிற போது மக்கள் கேட்கின்ற கேள்விக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் எல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.