மார்த்தாண்டம், ஜூலை 31 –
குழித்துறை தாலுகா அலுவலகம் அருகே ஒருங்கிணைத்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இதன் ஓரத்தில் செப்டிக் டேங்க் உள்ளது. இந்த செப்டிக் டேங்க் நிரம்பி கடந்த இரண்டு மாதமாக கழிவுநீர் வெளியே பாய்ந்து ஓடி தாலுகா அலுவக வளாகம், சாலை வழியாக பாய்ந்து செல்கிறது. இந்த கழிவு நீரை கடந்து தான் வக்கீல்களும் பொதுமக்களும் கோர்ட் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை உடனே சீரமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும், நேரிலும் வலியுறுத்தினர். ஆனால் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர். சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.
இதை சீரமைக்க வலியுறுத்தி குழித்துறை வக்கீல் சங்கம் சார்பில் இன்று நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் முன் பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ராபின் எட்வர்ட், இணைச் செயலாளர் சுனில் குமார், பொருளாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் பென்னட் ராஜ், அசோக் குமார், சவார்க்கர், ஞான ராஜசிங், சூரிய குமாரி, டாண் பெரின் மற்றும் டேவிட், ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலையில் வக்கீல்கள் செயர் போட்டு உட்கார்ந்து மறியல் போராட்டம் தொடர்ந்தது. சுமார் 2.30 மணி நேரம் மறியல் போராட்டம் நடந்தது. தொடர்ந்து தாரகை கட்பட் எம்எல்ஏ வருகை தந்து பேச்சு வார்த்தை நடத்தி எம்எல்ஏ நிதியில் ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார். பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரும் பங்கேற்றார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. பணி உடனே துவங்கப்பட்டு அதுவரை கழிவு நீர் லாரி மூலம் அகற்றவும் உறுதியளிக்கப்பட்டது.
இதுகுறித்து வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது: நீதிமன்ற வளாகத்திலிருந்து கழிவுநீர் சாலை வழியாக பாய்வதால் வக்கீல்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைப்பதற்காக ரூபாய் 50 லட்சம் உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு அவசர நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.