புதுக்கடை, ஜூலை 11 –
குழித்துறை அரசு மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களை டாக்டர்களின் ஈகோ பிரச்சனையால் பல மணி நேரம் அலக்கழிக்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் சுகாதார துறையின் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநகரத்தின் கீழ் மாவட்ட தலைமை மருத்துவமனை உட்பட 9 அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு சிகிட்சைக்காக தக்கலை, பூதப்பாண்டி, குழித்துறை, ஆசாரிப்பள்ளம் போன்ற மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பிரசவத்திற்கு இலவச சிசிட்சைக்காக வந்து செல்கின்றனர்.
குமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அதிக அளவில் பெண்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக குமரி மேற்கு மாவட்ட பகுதியான குழித்துறை அரசு மருத்துவமனையில் 2 மகப்பேறு மருத்துவர்களின் ஈகோ பிரச்சனை காரணமாக புற நோயாளிகள் பிரிவில் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதில் குறிப்பாக மாதாந்திர பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. இந்த மருத்துவமனையில் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட நோயாளிகள் அதிக அளவில் பயன் பெறுகின்றனர். குறிப்பாக மலையோர கிராமங்களான ஆறு காணி, பத்துகாணி உள்ளிட்ட பல கிராம மக்கள், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடி, தூத்தூர், வள்ளவிளை, தேங்காப்பட்டணம் போன்ற கடலோர கிராம மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
குழித்துறை அரசு மருத்துவமனையில் தற்போது 24 மருத்துவர்கள், 48 செவிலியர்கள், 32 மருத்துவமனை பணியாளர்கள், 2 ஆய்வக நடத்துனர்கள், ஒரு கதிர்வீச்சு நுட்பனர் மற்றும் அலுவலக பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகின்றனர். இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் 5 மகப்பேறு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகளுக்கான 4 மருத்துவர்கள் பணி புரிகின்றனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு மாதாந்திர பரிசோதனை செய்ய காலை 7.30 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவுக்கு பயனர்கள் வருவது வழக்கம். இவர்களை காலை 12 மணிக்கு முன் அனைத்து பரிசோதனைகளையும் செய்து அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் குறிப்பிட்ட 2 மகப்பேறு மருத்துவர்கள் தங்களுக்கு உள்ள ஈகோ பிரச்சனை காரணமாக கர்ப்பிணி பெண்களை பரிசோதிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். இதில் நீண்ட நேரம் கர்ப்பிணி பெண்கள் காத்திருக்கும் அவலம் நடைபெறுகிறது.
குறிப்பாக மலையோர கிராமம், கடற்கரை கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் 7 .30 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும் என்றால் அதிகாலை 5. 30 மணிக்கு முன்பாகவே தங்களது சொந்த பகுதியில் இருந்து பஸ் ஏறி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர்களின் ஈகோ பிரச்சனை காரணமாக மருத்துவர்கள் சரியான நேரம் வருவதில்லை. சில நேரங்களில் 10 மணி முதல் 12 மணி வரை மகப்பேறு பிரிவில் மகப்பேறு மருத்துவர்கள் அமர்வதே கிடையாது. இதனால் மேலும் காலதாமதம் ஏற்படுகிறது.
புற நோயாளிகள் பார்வை நேரத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் மருத்துவர்களிடம் அதிக நேரம் அமர்ந்து, தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை நோயாளிகள் வாங்க செய்வதற்காக டீல் பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுபோன்று இந்த மருத்துவமனையில் வாரம் 3 முறை கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்ய அனைத்து வசதிகள் உள்ளது. ஆனால் பல கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யாமல், தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு கட்டாயமாக அனுப்புவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
மேலும் இங்குள்ள மருத்துவர்கள் சிலர் தனியாக மருத்துவமனைகள் நடத்துவதாகவும் புகார் உள்ளது. மேலும் சில டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் பார்வையாளர் பிரிவு சிகிட்சைக்கு செல்வதும் வழக்கமாக உள்ளது.
விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதி அரசு மருத்துவமனைகளில் வாரம் தோறும் புதன்கிழமை மட்டும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்படுவது வழக்கம். ஆனால் குழித்துறை அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி காலை 8 மணி முதல் 12:00 மணிக்குள் போட வேண்டும். ஆனால் சில மருத்துவர்கள் அலட்சியத்தால் மதியம் 2 மணி வரை தாமதமாக தடுப்பூசி போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தாய்மார்கள் காலையிலே வந்து அமர்ந்து குழந்தைகளுடன் அவதிப்படுகின்றனர். பல தாய்மார்கள் காலையிலிருந்து தண்ணீரை குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துறை அலுவலர் ஆகியோர் தனிக்கவனம் செலுத்தி, குழித்துறை அரசு மருத்துவமனை அவலங்களுக்கு காரணமான டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் காலை மட்டுமின்றி, பிற்பகல் 3 முதல் 5 மணி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கான புற நோயாளிகள் பிரிவு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


