நாகர்கோவில், ஜூலை 2 –
குமரி மாவட்ட குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகளுக்கான சிறப்பு ஆவணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் கல்வி, உயர்கல்வி மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை எவ்வித தடையுமின்றி எளிதாகப் பெறுவதற்கும் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் இல்லக் குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய அடிப்படை ஆவணங்களை உடனுக்குடன் பெற்றுத் தருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பிறப்புச் சான்றிதழ் குழந்தைகளின் அடிப்படை வயது மற்றும் கல்வி சேர்க்கைக்கான முக்கிய ஆவணமாகும். புதிய ஆதார் பதிவு செய்தல் மற்றும் விடுபட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல். சாதிச்சான்றிதழ் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பில் உரிய சலுகைகளைப் பெறுவதற்கான சான்றிதழ். அரசின் கல்வி உதவித்தொகை மற்றும் இதர நிதியுதவிகள் நேரடியாகக் குழந்தைகளைச் சென்றடைவதற்கான புதிய வங்கி கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட சேவைகள் உடனடியாக வழங்கப்படும்.
இதன் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்துக் குழந்தைகள் இல்லங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களுக்குரிய அடிப்படை அரசு ஆவணங்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. என கூறினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரு குழந்தைக்கு வங்கி இணைப்புக்கான ஆணையினை வழங்கினார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சகிலாபானு, வங்கி மேலாளர்கள், வருவாய் துறை அலுவலர்கள் குழந்தைகள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



