குளச்சல், அக். 4 –
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கருங்கல் அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது தாயாரை பார்ப்பதற்காக நாகர்கோவில் உள்ள தாயார் வீட்டில் வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் காலை திடீரென மாணவி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து தாயார் உடனடியாக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அலுவலர் மாணவியிடம் விசாரித்து சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மாணவியிடம் கேட்டபோது பதில் எதுவும் கூறவில்லை. கர்ப்பத்திற்கு காரணமான ஆண் நண்பர் யார் என தெரியாது என கூறியுள்ளார். தொடர்ந்து மௌனமாகவே இருந்தார்.
இதையடுத்து கருங்கல் பகுதியில் உள்ள பாட்டி விட்டில் மாணவி தங்கி இருந்ததால் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீசார் சம்பவ இடத்தில் சென்று மாணவியிடம் விசாரித்தனர். ஆனால் போலீசாரிடமும் மாணவி வாய் திறக்கவில்லை. இதனால் கர்ப்பம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மகளிர் போலீசார் காரணமான நபரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து கருங்கலில் உள்ள பாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி மாணவி பயன்படுத்திய செல்போனையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.


