குளச்சல், செப். 16 –
கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பகுதியை அடுத்த மிடாலம் நடுத்துறையை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (73). மீன்பிடி தொழிலாளி. கடந்த மாதம் 14-ம் தேதி ஜான் போஸ்கோ குளச்சல் அருகே லட்சுமிபுரத்தில் வசித்து வரும் தனது மகளை பார்க்க சென்றார். இதற்காக பஸ்சில் இருந்து இறங்கி லட்சுமிபுரம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது குறும்பனை சுனாமி காலனியை சேர்ந்த ஆண்டனி என்பவர் ஒட்டி வந்த பைக் ஜான் போஸ்கோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜான் போஸ்கோ உடையார் விளையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஜான் போஸ்கோ உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



