குளச்சல், ஆக.29-
மண்டைக்காடு அருகே நடுவூர் கரை பகுதி சேர்ந்தவர் நடராஜன் மனைவி பகவதி (84). தனது பேத்தியின் திருமண நிகழ்வில் பங்கேற்க சென்றார். சம்பவ தினம் பஸ்ஸில் ஆற்றூரில் இருந்து திங்கள் நகருக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மண்டைக்காடு அரசு பஸ்ஸில் ஏறி சென்றுள்ளார். அப்போது பஸ்ஸில் நின்ற பகவதி சற்று நிலை தடுமாறியதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து பஸ் நிறுத்தத்தில் சில பெண்கள் இறங்கி சென்றுள்ளனர். அந்த சமயம் பகவதி கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயின் காணாமல் போய் உள்ளது. பின்னர் பஸ்ஸில் தேடியும் நகை கிடைக்கவில்லை. முன்பு நிறுத்தத்தில் இறங்கி சென்ற பெண்களில் ஒருவர் செயினை பறித்து விட்டு தப்பியிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இது குறித்து பகவதி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


