மார்த்தாண்டம், ஜூன் 28 –
குமரி மாவட்ட மலையோர கிராம பகுதிகளில் சமீப காலமாக யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றியாறு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் புகுந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள மரங்களை நாசம் செய்தன. குடியிருப்பு வாசிகள் சத்தம் எழுப்பியதால் யானைகள் அங்கு இருந்து சென்றுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் புகுந்த யானை அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சன்னதி படிக்கட்டுகளை சேதப்படுத்தியது. அதோட அந்த பகுதியில் இருந்த பொருள்களை துவம்சம் செய்தது.
இதை அடுத்து அங்கேயே யானை கூட்டம் முகாம் இட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை யானை கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒன்று அரசு ரப்பர் கடை குடியிருப்பு பகுதிக்கு வந்து அங்குள்ள ஒரு வீட்டின் கதவை தட்டி உடைத்தது. உடனே பொதுமக்கள் கூச்சலிட்டனர். உடனே யானை அங்கிருந்து விளை நிலத்தில் புகுந்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டது.
மேலும் ஆக்ரோஷம் அடைந்த யானை அங்கிருந்த பாக்கு மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியதுடன் தடுப்பு வேலிகளை உடைத்து துவம்சம் செய்துள்ளது. மேலும் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியை புரட்டி போட்டு உணவு இருக்கிறதா என பார்த்து உள்ளது.
ஆக்ரோஷத்துடன் யானை சுற்றி திரிவதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பீதியில் உறைந்துள்ளனர். இது போன்று கோதையாறு பகுதிகளிலும் யானைகள் விளை நிலங்களில் புகுந்து தென்னை, கமுகு மரங்களை பிடுங்கி கடுமையாக சேதப்படுத்தி உள்ளன. வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.