தருமபுரி, 22.08.2026:
பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 20-ம் ஆண்டு வரலட்சுமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மூலவர் ஆதிலட்சுமி அம்மன் மற்றும் உற்சவர் ராஜயோக ராஜலக்ஷ்மி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவையொட்டி கோயில் வளாகத்தில் கணபதி பூஜை, ஹோமம் மற்றும் வரலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து வரலட்சுமி பூஜையும், 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பெண்கள் பக்தியுடன் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
இதில் தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு விழாக்குழு சார்பில் குங்குமம், மாங்கல்யக் கயிறு, மஞ்சள், ஜாக்கெட் துணி மற்றும் வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள், வரலட்சுமி அம்மனை வழிபட்டு குடும்ப நலன், செல்வம் மற்றும் வளம் பெருக வேண்டி பிரார்த்தனை செய்தனர்.



