நாகர்கோவில், மார்ச் 3 –
நாகர்கோவில் கோணம் பகுதியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் திறனகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன்மையம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் உட்பட 23 திறனகங்களை காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
“திறனகம்” எனும் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள், இளைஞர்களின் தொழில் விருப்பங்களை தொழில்துறை தேவைகளுக்குகேற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து, நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பை பெற வழிகாட்டும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த மையங்களாக செயல்படவுள்ளன.
மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த திறனகத்தில் கணினி வசதி, குளிர்சாதன வசதி, உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் மாணவ, மாணவியர்கள் நன்கு பயில வழிவகை செய்கிறது. மேலும் இத்திட்டம் வழியாக இளைஞர்களின் திறன் மேம்பாடு மூலம் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் அரசின் உறுதியான நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, உதவி இயக்குநர் லெட்சுமிகாந்தன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், பொ. ஆறுமுக வெங்கடேஷ், மாவட்ட திறன் அலுவலர் (திறனகம்) கி.ராஜிகா, மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



