நாகர்கோவில், அக். 22 –
குமரி மாவட்ட வீராங்கனை 40 வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்
தமிழக அணி சார்பாக பங்கேற்று 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை. தமிழக அணி சார்பாக பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.
அக்டோபர் 10 முதல் 14 ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 40 வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2025 ல் தமிழக அணி சார்பாக கலந்து கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அரியபெருமாள்விளை ஊரை சேர்ந்த ச.சித்ரா 20 வயதுக்குட்பட்டோருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இந்த வெற்றியானது தமிழக தடகள வரலாற்றில் யாரும் எட்டிடாத ஒரு மைல் கல் எனவும், 40 வருட ஜூனியர் தடகள போட்டி வரலாற்றில் ஸ்டீபில்சேஸ் போட்டியில் தமிழக அணி சார்பாக பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என அவரது பயிற்சியாளர் காவல்துறை உதவி ஆய்வாளர் திலீபன் தெரிவித்தார். மேலும் வெற்றி பெற்ற வீராங்கனை சித்ராவை பாராட்டி தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா ரொக்க பரிசு வழங்கி கெளரவித்தார்.மேலும் பயிற்சியாளர்கள் திவாகரன், முருகேசன், கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்க செயலாளர் காட்வின் மற்றும் கனி ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர்.
இந்த வெற்றி குறித்து வீராங்கனை சித்ரா கூறியதாவது: நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நான் பள்ளியில் படித்துக் கொண்டே விடுமுறை நாட்களில் கிடைத்த வேலைகளை செய்து வந்தேன். எனக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது. முறையாக விளையாட பயிற்சியில் ஈடுபட போதுமான உபகரணங்கள் கூட என்னிடம் கிடையாது. இந்நிலையில் நான் ஒரு இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது காவல் உதவி ஆய்வாளர் திலீபன் சாரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை அழைத்து விசாரித்தார். அப்போது அவரிடம் என்னுடைய விளையாட்டு ஆர்வத்தை குறித்து கூறினேன். உடனே அவர் நான் உனக்கு பயிற்சி தருகிறேன் எனக் கூறி எனக்கு பயிற்சி அளித்தார். அவரின் கடுமையான பயிற்சி எனக்கு இந்த வெற்றியை தேடி தந்தது என அவர் தெரிவித்தார்.



