களியக்காவிளை, ஜுலை 30 –
கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்கள். பிரசித்தி பெற்ற மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்று நெல் கதிரை பிரசாதமாக பெற்றுச் சென்றனர். நிறை புத்தரிசி பூஜைக்கு பின் நெற்கதிர்களை வீட்டுக்குக் கொண்டு சென்றால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை பகவானின் பாதத்தில் வைத்து பூஜை செய்வதே நிறை புத்தரிசி பூஜை எனப்படுகிறது. இதனால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இறைவனின் சன்னதியில் பூஜையில் வைக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் நெற்கதிர்களை வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதன் மூலம் ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் நெல்மணிகளை வயலில் உதிர்த்து போட்டு பயிர்செய்தால் பயிர்கள் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள கோயில்களில் நடைபெறும். அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் என குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து ஆலயங்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில்
நடை பெற்ற நிறை புத்தரிசி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெல்
கதிர் பிரசாதம் பெற்று சென்றனர்.