நாகர்கோவில், ஜூலை 4 –
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இத்தேர்வினை மாவட்ட முழுவதும் இருந்து மொத்தம் 7 ஆயிரத்து 338 தேர்வர்கள் எழுத உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1 இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இத்தேர்வை இன்று 1369 பேர் எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டன. இதில் 25 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்களில் 3 பேருக்கு சொல்வதைக் கேட்டு எழுதவர்கள் நியமிக்கப்பட்டனர்.
நாகர்கோவில் ஜோசப் கான்வென்டில் 253, லிட்டில் பிளவர் பள்ளியில் 285, கார்மல் பள்ளி, நாராயணகுரு மெட்ரிக் பள்ளி ஆகிவற்றில் தலா 300, வல்லன் குமாரவிளை பள்ளியில் 201 பேரும் தேர்வு எழுதினார். தேர்வை சிறப்பாக நடப்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
இந்த குழுவில் மாவட்ட வருவாய் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆர்டிஓ மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்க்கவும் தேர்வுகள் தடை இன்றி தேர்வு எழுதவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன.
நாளை 5 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -2 நடைபெறுகிறது. இதற்காக அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ மெட்ரிக் பள்ளி, டிவிடி மேல்நிலைப்பள்ளி, இவான்ஸ் பள்ளி, தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட 22 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளைய தேர்வை 5 ஆயிரத்து 969 பேர் எழுத உள்ளனர். இதில் 66 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவார். இவற்றில் 8 பேருக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.


