மார்த்தாண்டம், பிப். 25 –
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, காணிப்பற்று பகுதியிலுள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் காணி பழங்குடி மக்களின் வாழ்விட மையங்களில் திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியை சார்ந்த மாணவ மாணவிகள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக கள ஆய்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அனுமதியுடனும் வனத்துறை ஊழியர்களின் உதவியுடனும் மாணவர்கள் தங்களின் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
தச்ச மலை, கோலஞ்சி, முப்பறக்கல், மோதிர மலை, தோட்டமலை பகுதியிலுள்ள காணி செட்டில் மென்றுகளில் பெப்ருவரி 19 ம் தேதி முதல் 23 ம் தேதிவரை 5 நாட்கள் முகாம் நடைபெற்றது.
கடையால் பேரூராட்சி கவுன்சிலர் ரெகு மாணவர்களுடன் உடன் இருந்து தேவையான அறிவுரைகள் வழங்கி மாணவர்களுக்கு வழிகாட்டினார்.
நெய்யூர் மவுண்ட் லிட்ரா சீ மேல்நிலை பள்ளியின் சுகாதார கவுன்சிலர் ஆசிரியை சுஜித் ஆய்வு முகாமின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தேவையான அறிவுரைகள் வழங்கி பேசினார்கள். மாணவர்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழில் காணிப்பழங்குடி மக்களின் கல்வி அதிகாரமயமாக்கல் பற்றிய ஆய்வு மற்றும் விழிப்புணர்வு என்னும் தலைப்பில் ஆனார்கலி, அனிஷா, கிரண் றோய், அர்ஜுன், அபீனா, ஆன் மார்டின் ஷிமி, விவான், ஜானக், ஆஷிகா, செய்யது ஷிபான், மொகம்மது அப்ஸல், அபிஷேக் ஆகிய மாணவ, மாணவிகள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
காணி மக்களின் கலாச்சார பன்மைத்துவங்கள் அவர்களின் வாழ்வியலில் வந்த மாற்றங்கள் பொருளாதார பின்னணிகள் கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிய புரிதல்கள் ஆய்வு மாணவர்கள் தெரிந்து கொண்டனர். சில பகுதிகளில் மின் இணைப்பு இல்லாமை, பால வசதியின்மை, விவசாயத்தை அழிக்கிற வனவிலங்குகள் தொல்லை, ஆஸ்பத்திரி வசதி போன்ற அவர்களின் ஆதங்கங்களும் ஆய்வின் போது வெளிப்படுத்தப்பட்டன. தச்சமலை ஆரம்ப பள்ளியை சந்தித்து அங்கு பயில்கின்ற மாணவர்களோடும் உரையாடல்கள் நடத்தினார்கள்.
23 ம் தேதி நடைபெற்ற நிறைவு விழா கூட்டத்தில் ஏராளமான காணி பழங்குடி மக்கள் கைப்பிள்ளைகளோடு கலந்து கொண்டனர். மார் இவானியோஸ் கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் முனைவர் சுசீல்குமார், திட்டஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியைகள் ஆர்ச்சா மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மாணவர்களுக்கு இந்த ஆய்வு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவிய எல்லோருக்கும் கல்லூரி சார்பில் நன்றி தெரிவித்தனர்.



