நாகர்கோவில், ஆக. 6 –
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட எல்லை பகுதியான கூத்தன்குழி லைட் ஹவுஸ் அருகே உள்ள கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் வழி படகில் பீடி இலை கடத்தப்படுவதாக கன்னியாகுமரி கடலோர குழும பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வில்சன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குளச்சல், கன்னியாகுமரி போலீஸ் நிலைய ஏட்டுகள் மற்றும் போலீசார் கூத்தன்குழி கடற்கரைக்கு நேற்று அதிகாலை விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே உள்ள ஆற்றூர் கீழத்தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (வயது 23) என்பதும், அவர் நெல்லை வட்ட ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து
விசாரணை நடத்தியபோது கடல் வழியாக படகு மூலம் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தி கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பதற்காக 85 பண்டல் பீடி இலைகளை கண்டெய்னர் வாகனத்தில் கடற்கரையில் கொண்டு வந்து நிறுத்தி இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த கண்டெய்னர் வாகனத்தில் இருந்த தலா 32 கிலோ 500 கிராம் எடையுள்ள 85 பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 2 ஆயிரத்து 762 கிலோ 500 கிராம் எடையுள்ள பீடி இலைகள் இருந்தது. இந்த பீடி இலை பண்டல்களை கடத்தி கொண்டு வர பயன்படுத்திய கண்டெய்னர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பீடி இலை பண்டல்களையும், அதனை இலங்கைக்கு கடல் வழியாக படகு மூலம் கடத்த முயன்ற இசக்கியப்பனையும் தூத்துக்குடி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் உதவி ஆணையரிடம் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர்.



