கன்னியாகுமரி, செப்.08.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 900 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 53,520 மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக கடியப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி, மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள சமையலறைகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு உணவை பாதுகாப்பாகவும் விரைவாகவும் தயாரிப்பதற்கான பாத்திரங்கள், எரிவாயு, குடிநீர், சமைத்த உணவை சேமிக்கும் இடம் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான கிடங்கு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஊட்டச்சத்துமிக்க காலை உணவை தடையின்றி வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம் என்றும், விரிவாக்கம் செய்யப்படும் அனைத்து பள்ளிகளிலும் சமையலறைகள் தேவையான அடிப்படை வசதிகளுடன் தயாராக இருப்பதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



