நாகர்கோவில், டிச.2 –
குமரி பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட குளங்களில் தாமரை வணிக ரீதியாக ஹைபிரிட் விதைகளையும் கெமிக்கல் உரங்களையும் களைக்கொல்லிகளையும் பயன்படுத்தி தாமரை சாகுபடி செய்து குளங்களை அழிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் தாமரை வளர்க்க ஏலம் போடுவதை நிறுத்திவிட்டனர்.
ஆனால் அனுமதி இன்றி சட்டவிரோதமாக தாமரை சாகுபடியை கும்பல்கள் செய்து வருவதால் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும். விவசாய பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மட்டுமின்றி தாமரை சாகுபடி செய்வது தொடர்பாக ரவுடிகளுக்கு இடையேயும் ஜாதி ரீதியாகவும் யார் பெரியவர் என்ற நிலையிலும் சண்டைகள் மற்றும் தொழில் போட்டிகள் மோதல்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.
மேலும் குளங்களின் பொறுப்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தாமரை பறிப்பவர்களையும் தாமரை பயிரிடுபவர்களையும் தடுக்க முயன்றால் அவர்களை தாக்கவும் மிரட்டவும் செய்து வருகிறார்கள். சட்டவிரோதமாக குளங்களை அழிக்கும் வகையில் தாமரை சாகுபடி செய்து வருவது சம்பந்தமாக நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார்கள் கொடுத்தால் கூட புகாரை வாங்க மறுக்கும் நிலைமையும், சில நேரங்களில் புகார்கள் மீது அதிகபட்சமாக மனு ரசீது மட்டும் போட்டு கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து விடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று வரை நீர்வளத் துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தாமரை வளர்ப்பவர்களுக்கு எதிராக கொடுத்த மனுக்களின் மீது குமரி மாவட்டத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கை கூட போடப்படவில்லை என்பதில் இருந்து நிலைமையின் விபரீதத்தை உணர முடியும்.
ஆகவே கடந்த 20-11-2025 ல் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் தனக்கு கீழே உள்ள உதவி பொறியாளர்கள் கொடுத்த புகார்களில் குறைந்தபட்சம் 2025 ஆம் ஆண்டில் உள்ள புகார்களை தொகுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும், 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீர்வளத்துறை செயற்பொறியாளரிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் நிலையங்களுக்கு தக்க உத்தரவு பிறப்பிக்கவும், நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கவும் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.


