கிருஷ்ணகிரி, அக். 13 –
கிருஷ்ணகிரியில் அதிமுக, தவெக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் உள்ள வெல்கம் மஹாலில் நடைபெற்றது. இந்த இணைப்புவிழா நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் முன்னிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கட்டிகானபள்ளி சையத் ஏஜாஸ் அஹமது உள்ளிட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அவர்களை சால்வை அணிவித்தும், கட்சி துண்டு அணிவித்தும் மதியழகன் எம்.எல்.ஏ வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் மனதார வரவேற்கிறேன் என்றும், தி.மு.க. அரசின் நான்கரை ஆண்டு சாதனைகளை மக்களிடம் அனைவரும் கொண்டு சேர்க்க வேண்டும். மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், தமிழ்புதல்வன், புதுமைப்பெண், கிராம சபை தீர்மானங்கள் திட்டங்களாக நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதியளித்தது உள்பட எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக தந்தவர் முதலமைச்சர். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற நீங்கள் அனைவரும் கழக நிர்வாகிகளோடு இணைந்து பணியாற்றிட வேண்டும் எனவும், சிறப்பாக பணியாற்ற கூடிய அனைவருக்கும் பொறுப்புகள் நிச்சயம் தேடி வரும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பி.டி. அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராஜன், நகர திமுக நகரச் செயலாளர்களான அஸ்லம், வேலுமணி, கட்டிகானபள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சையத் ஏஜாஸ் அகமது, நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



