நாகர்கோவில், அக்டோபர் 22 –
நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் தற்போது நவீன தொழில்நுட்ப அடிப்படையில் குற்றவாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டு தனி சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் குற்றவாளிகளின் தடயங்களை பயோமெட்ரிக் முறையில் பதிவேற்றம் செய்யும் பிரிவு நாகர்கோவில் ஒழுகினசேரியில் இன்று திறக்கப்பட்டது.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள விரல் ரேகை பதிவு கூடத்தில் இந்த பயோமெட்ரிக் பதிவேற்றம் பிரிவை எஸ்.பி. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி. லலித்குமார், விரல் ரேகை பிரிவு ஏடிஎஸ்பி ரத்தினசேகர், டிஎஸ்பி சுப்பையா, இன்ஸ்பெக்டர் வின்சென்ட், அன்பரசி மற்றும் விரல் ரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் ஜவஹர்லால், எஸ்.ஐ. வினிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி உருவாக்கப்பட்ட “காவலர் உணவு அருந்தும் அறை” இன்று (22.10.25) மாவட்ட காவல் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. அலுவல் காரணமாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பிச்சையா, கண்ணதாசன், சிவசங்கரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சாயி லெட்சுமி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருண், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



