ராஜாக்கமங்கலம், செப். 2:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் திறப்பதற்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பல கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, விவசாயப் பரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பாக, பத்மநாபபுரம் புத்தனாறு சானலில் இருந்து பிரியும் ராஜாக்கமங்கலம் சானல் வழியாக ஆலங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் ஆலங்கோட்டைக்கு செல்லும் மூஞ்சிறைவிளை கால்வாய் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால், கால்வாயில் செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கால்வாய் மூலம் செவ்வல்குளம், ஊரார்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்வதுடன், அவற்றின் மூலம் பல ஏக்கர் தென்னந்தோப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கால்வாய் சீரமைக்கப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதனை கண்டித்தும், மூஞ்சிறைவிளை கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைத்து கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கக் கோரியும் விவசாயிகள் கால்வாயில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராஜாக்கமங்கலம் வட்டாரத் தலைவர் சொர்ணம் பிள்ளை தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் என்.எஸ். கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் ரத்தினம், குமரேசன், ராஜலிங்கம், சாந்தகுமாரி, மாவட்ட செயலாளர் ரவி, துணை செயலாளர் விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கால்வாய்களை முறையாக பராமரித்து விவசாயிகளின் பாசனத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



