வேலூர், நவ. 18 –
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஏரிகளை இணைத்து 6.2 கிலோமீட்டர் நடைபாதை, படகு குழாம், செயற்கை மண் தீவுகள் உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் ரூ.36.59 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இதனுடன், ரூ.20.90 கோடி மதிப்பில் காட்பாடி நகரில் மூன்று வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் கழிஞ்சூர் ஏரி உபரி நீர் கால்வாய்த் தரைப்பாலம் பணிக்கான ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
விழாவிற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்க, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதில், காட்பாடி தொகுதிக்காக குறை கூற முடியாத அளவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் இவ்வேரியில் மருத்துவக்கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தபோதும் ஆட்சி மாற்றத்தால் அது மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஏரிகளை மக்கள் பயன்படும் வகையில் மாற்ற வேண்டிய அவசியம் இருந்ததால் தற்போது அவை சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். ஏரிகளை சுத்தமாக பேணுவது மக்களின் பொறுப்பு எனவும், விரைவில் படகு சவாரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மேல் அரசம்பட்டு அணை, பேர்ணாம்பட்டு பத்தல பள்ளி அணை இவ்விரண்டு அணைகளையும் விரைவில் தேர்தலுக்கு முன் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் கூறினார். குடியாத்தம் மேர்தாணா அணையை சுற்றுலா தளமாக மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேலூர் ஒருகாலத்தில் பின்தங்கிய மாவட்டமாக இருந்ததை மாற்றியுள்ளோம்; காட்பாடி மற்றும் மகி மண்டலத்தில் சிப்காட் அமைப்பு மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த ஏரிகளைத் திறந்து வைத்தது தனது “பெத்த பொண்ணு கல்யாணம் ஆன மகிழ்ச்சி” அளித்ததாக அமைச்சர் துரைமுருகன் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.



