திருப்பூர், ஜூலை 5 –
காக்கி நிறத்தை பார்த்தாலே பயப்படுகிறார்கள். தமிழக காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஜெயராமன் எம்.எல்.ஏ. திருப்பூரில் கூறினார்.
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் திருப்பூர் ராயபுரம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், பகுதி செயலாளர்கள் அரிகரசுதன், கேசவன், பி.கே. முத்து, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது: சமீபகாலமாக தமிழக காவல்துறையை நினைத்தால் மக்கள் பயந்து விழுந்து ஓடக் கூடிய நிலை உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலங்களில் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக காவல்துறை பெயர் பெற்றது. காக்கி சட்டைக்கு தனி மரியாதை இருந்தது. இப்போது காக்கி நிறத்தை பார்த்தால் மக்கள் பயந்து ஓடுகிறார்கள். காவலர்கள் எப்போது தாக்குவர்கள் உயிர்பலியாகும் என்று அச்சத்தில் உள்ளனர். நம்பிக்கை இழந்து விட்டனர்.
மு.க. ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை எதற்கும் லாயக்கற்று துப்பு கெட்ட துறையாக மாறிவிட்டது. தமிழக மக்கள் காவல்துறை மீது முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர். விருதாசலத்தில் பள்ளி மாணவி வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அஜித்குமார் அடித்து கொல்லப்பட்டுள்ளார். சென்னையில் 8 வயது மாணவியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். காவல்துறையின் நடவடிக்கையால் மக்கள் அச்சப்பட்டு வீட்டில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை மாற்றுவதற்காக வருகிற 7-ந் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தமிழக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தாரக மந்திரத்தோடு எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அந்த சுற்றுப்பயணத்தை தொடர்ந்து அவர் முதல்-அமைச்சராக அமருவார். விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு போகும். குண்டடத்தில் அ.தி.மு.க. நிர்வாகியை அ.ம.அ.தி.மு.க. நிர்வாகி மிரட்டியதால் தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அவருக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
அவினாசியில் ரிதன்யா தற்கொலைக்கு ஆறுதல் சொல்லாமல் மக்களிடம் வீடியோ காலில் முதல்-அமைச்சர் காப்பி கொடுத்தார்களா சொன்னால் நானும் வந்திருப்பேனே என நய்யாண்டியாக பேசியுள்ளார். மு.க. ஸ்டாலின் குடும்பத்தை பார்த்து மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒன்றிணைவோம் வாருங்கள் என்கிறார். தி.மு.க.வின் சாயம் வெளுத் துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.