நாகர்கோவில், ஏப். 29 –
மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு அருகே குன்னம்பாறை பகுதியில் வசித்து வருபவர் வர்கீஸ் மகன் அனீஸ் என்ற அனிசன் (29). இவர் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் அவ்வப்போது சொந்த ஊரான குன்னம்பாறைக்கு வந்து செல்வார்.
கடந்த 2012ம் வருடம் அவ்வாறு ஊருக்கு வரும் போது டேவிட்சிங் என்பவருடைய மனைவி திலகா என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு, அதன் விளைவாக மூன்று குழந்தைகளுக்கு தாயான திலகா என்பவரை தன் வீட்டில் சேர்த்து வைத்து குடும்பம் நடத்த கடந்த 31.8.2012 அன்று அழைத்து வந்துள்ளார்.
இதனை அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தலைமையில் கிராம மக்களும் எதிர்த்தனர். இதனால் சுரேஷ் மீது அனிசன் விரோதம் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 31.8.2012ம் தேதி மதியம் சுரேஷ், அனிஸ் என்ற அனிசனை பார்த்து முதலில் திலகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பு என்று அனிஷ் இடம் கூறியதால் அனிசன் பின் தொடர்ந்து சென்று சுரேசை வழிமறித்து இடுப்பில் இருந்த கத்தியால் குத்தினார். இதில் சுரேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வி எம் ஜெகதேவ் ஆஜராகி வாதாடி வந்தார்.
இந்நிலையில் பத்மநாபபுரம் கூடுதல் செசன் நீதிமன்ற நீதிபதி பரமசிவ தாஸ் இன்று அனிசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இறந்து போன சுரேஷின் குடும்பத்தாருக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகையாக 2 லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.



