மார்த்தாண்டம், மார்ச் 9 –
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் விஷ்வா என்ற உண்ணி (63). இவர் அந்த பகுதியில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் மடிச்சல் பகுதி சேர்ந்த வித்யாதரன் (48), நெய்யாற்றின்கரை பகுதி விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து சம்பவதினம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் சுமார் 112 கிராம் நகைகளை அடகு வைத்து விட்டு நான்கரை லட்சம் ரூபாய் கடன் பெற்று சென்று உள்ளனர்.
இதை அடுத்து நகைகளை சரிபார்த்த போது அவைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வா மோசடியில் ஈடுபட்ட நபர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. உடனடியாக களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வித்யாதரன், விஜயகுமார் 2 பேரும் தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


