தேனி, அக்டோபர் 09 –
தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக மாவட்ட அளவிலான கல்வி கடன் முகாம் (Education Loan Camp) பெரியகுளம் மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.
இக்கல்விக்கடன் வழங்கும் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் தங்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், முகவரிக்கான சான்று, சாதிச்சான்று, முதல் பட்டதாரி சான்று (இருப்பின்), ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் Bonafide certificate, கல்லூரி கட்டண விவரம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இதேபோல இணை விண்ணப்பதாரராக வரும் பெற்றோர்கள் அவர்களது பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் வருமானச் சான்றிதழை கொண்டு வர வேண்டும். மேலும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ என்ற இணைய தளத்திலும் கல்விக் கடனுக்காக பதிவு செய்து கொள்ளலாம். மத்திய / மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்து கட்டணம் போன்ற கட்டணங்களை இந்த கல்வி கடன் மூலம் பெறலாம்.
எனவே உயர்கல்வி பயில கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இக்கல்விக்கடன் முகாமினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.



