தென்காசி, ஜூன் 1 –
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின்
(ஜூன் 3) பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுரண்டை நகரம் கீழச்சுரண்டையில் அமைந்துள்ள கலைஞர் நினைவாலயத்தில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மாதம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், பொதுநலப் பணிகள் மற்றும் கழக நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக அயராது உழைத்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவனுக்கு கருப்பு-சிவப்பு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு வேட்டி அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை, தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கனிமொழி மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



