ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 03 –
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், துணைத் தலைவர் எஸ். அர்ஜுன் கலசலிங்கம், துணை வேந்தர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன், எக்ஸ்க்யூட்டிவ் கவுன்சில் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் துணைவேந்தர் ஆண்டறிக்கையில் கடந்த ஆண்டு பல்கலை பெற்ற உயர் தகுதிகளையும், மாணவர்கள் சாதனைகள், ஆசிரியர்கள் ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சி பற்றியும் விவரித்தார். அதனைத் தொடர்ந்து பொறியியல், கட்டடக்கலை, தோட்டக்கலை, வேளாண்மை, அலைடு ஹெல்த் சயின்ஸ், கலை மற்றும் அறிவியல் இளங்கலை மாணவர்கள் 3048 பேருக்கும், முதுகலை மாணவர்கள் 470 பேருக்கும், ஆராய்ச்சித்துறை பி.ஹெச்.டி மாணவர்கள் 34 பேருக்கும் என மொத்தம் 3552 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள், கம்பெனி உயர் அதிகாரிகள், கார் டெக்னாலஜிஸ் கம்பெனி, ஆர்.கே. ராமச்சந்திரன், டெக் மேங்கோ கம்பெனி, எஸ்.கே. ஜெயஸ்ரீ ஆகியோர் பட்டங்களை வழங்கினர்.
முன்னதாக ரேங்க் எடுத்த 128 மாணவர்களுக்கு, பதக்கம், சான்றிதழ், பட்டங்களை வழங்கினர். சிறப்பு விருந்தினர்கள் பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் “இந்தியாதான் 2030-ல் உலகப் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும். அனைத்து கணிணி மென்பொருள்கள் விவசாயத் தேவை உட்பட இந்தியாவிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும்” என்றும் மேலும் மாணவர்கள் தங்களையும் தாங்கள் பெற்ற கல்வி அறிவையும் நம்ப வேண்டும். அதனுள்ளே சென்று புதியனவற்றை கண்டறிய வேண்டும் என்று கூறி மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார்.
பட்டம் பெற்ற மாணவர்கள் எழுந்து உறுதிமொழி எடுத்தனர். விழாவில் இயக்குநர்கள்,
டீன்கள், துறைத் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பட்டமளிப்பு விழாக்குழு பேராசிரியர்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.