கன்னியாகுமரி, ஜன. 17 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 77 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த 78 வயது மூதாட்டியான லட்சுமி தனது தள்ளாத வயதிலும் நடக்க முடியாத நிலையில் இருந்த பிறகும் கையில் கம்பை ஊன்றிக்கொண்டு சுன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 77 மீட்டர் நீளம் உள்ள கண்ணாடி பாலத்தை நடந்தே சென்று பார்வையிட்டார்.
அதேபோல திருவள்ளுவர் சிலையின் 38 அடி உயரமுள்ள கால் பாதம் வரை மூதாட்டி 75 படிக்கட்டுகள் வழியாக ஏறி சென்று பார்வையிட்டார். அந்த மூதாட்டிக்கு துணையாக அவரது பேத்திகளான பழவூரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி மற்றும் 10-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தங்களது பாட்டி லட்சுமியின் கையை பிடித்துக்கொண்டு அழைத்துச் சென்றனர்.
தள்ளாத வயதிலும் கண்ணாடி பாலத்தை பார்வையிட வந்த மூதாட்டியின் ஆர்வத்தை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர். கண்ணாடி பாலத்தில் இந்த மூதாட்டி கம்பை ஊன்றிக்கொண்டு தள்ளாடி தள்ளாடி பேத்திமார்களின் துணையோடு நடந்து வந்த காட்சியை சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்துக் கொண்டனர்.


