கன்னியாகுமரி, ஜன. 12 –
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் படகுத் துறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், கடைகளில் பொருட்கள் வாங்க குவியும் சுற்றுலா பயணிகள் என எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் இன்று காலை சன்னதி தெருவில் உள்ள ஒரு கடையின் மாடியில் ஒரு வாலிபர் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சுற்றுலா பயணிகள் பயத்துடன் ஓடினர். தெருவில் உள்ள வியாபாரிகள் அந்த வாலிபரை கீழே இறங்கும் படி கூறினர். அந்த வாலிபர் கற்களை எடுத்து கீழே நின்றவர்கள் மீது வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாலிபர் வீசிய கற்கள் தெருவில் உள்ள ஒட்டல் மற்றும் கடைகளில் விழுந்து கண்ணாடிகள் உடைந்து சிதறின.
இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உதவியுடன் வாலிபரை பிடித்து கீழே இறக்கினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவரை கொட்டாரம் பகுதியில் உள்ள மனநல காப்பகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.



