மார்த்தாண்டம், டிச. 13 –
அருமனை அடுத்த குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மனைவி விஜயா (39). இவர் களியல் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இந்தப் பெட்ரோல் பங்கிற்கு கடையாலுமூடு பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் சுனில் (32) என்பவர் அடிக்கடி வாகனத்துக்கு பெட்ரோல், டீசல் போடுவதற்காக வருவது வழக்கம்.
சம்பவ தினம் தனது காருக்கு பெட்ரோல் போட வந்தார். அப்போது ரூ.3 ஆயிரத்துக்கு பெட்ரோல் போட்டுவிட்டு, பணம் பிறகு தருகிறேன் என கூறியுள்ளார். அப்போது ஊழியர் விஜயா உடனே பணம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுனில் ஆபாசமாக விஜயாவை பேசி பிடித்து கீழே தள்ளி உள்ளார். மேலும் கொலை மிரட்டல் கொடுத்துள்ளார்.
சத்தம் கேட்டு சக ஊழியர்கள் மற்றும் பெட்ரோல் பேங்க் உரிமையாளர் மோகன்தாஸ் ஆகியோர் ஓடி வந்து விஜயாவை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஜயா கடையாலுமூடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சுனில் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சுனில் மீது ஏற்கனவே கடையாலுமூடு காவல் நிலைய குற்றவாளிகள் சரித்திர பதிவேடு பட்டியலில் சி பிரிவில் உள்ளார் என போலீசார் கூறினார்கள்.


