தென்தாமரைகுளம், ஜூலை 25 –
குமரி மாவட்டம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கூறியதாவது: கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்படுவதும் மீனவர்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்பதும் தொடர்ந்நு நடைபெற்று வருகிறது. புத்தன் துறை பகுதியில் கடல் அரிப்பு காரணமாக 13 வீடுகள் பாதிக்கப்பட்டதால் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பகுதியில் கடலரிப்பால் பாதிப்பு வரவிருக்கிறது என கடந்த வருடமே முறையிட்டு ஒரு தற்காலிக அலை தடுப்பு சுவராவது அமைத்து தரவேண்டி கிராம மக்களும் மீனவர் நல அமைப்புகளும் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் சம்மந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுக்கு நிதி வேண்டி விண்ணப்ப கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இக்கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. மாநில அரசின் அலட்சியப் போக்காலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான போதிய அழுத்தம் கொடுக்கப்படாததாலும், சட்டமன்ற உறுப்பினரான தளவாய் சுந்தரத்திற்கு இப்பிரச்சினை குறித்தான எவ்வித அக்கறையும் இல்லாததாலும் இன்று இம்மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நடுச்சாலையில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பகுதிகளில் இடம் தருவதாக சமரசம் பேசுகிறார். கடலரிப்பு ஏற்பட்ட பகுதி மற்றும் கடலரிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளை ஆய்வுசெய்து கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டமன்றத்தில் இது குறித்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் வாய் திறக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் பெயரளவு நடவடிக்கைகளுடன் விட்டு விடுகிறது. நிரந்தர தீர்வு காண முயற்சிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் நாம் தமிழர் கட்சி என்றும் துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும், இந்த கடலரிப்பு பிரச்சினைக்கான நிரந்தர தீர்வும் கிடைக்கும் வரை அதற்கான அரசியல் அழுத்தங்களை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டே இருப்போம் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன், மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன், செய்தி தொடர்பாளர் ஜியோ டியோ, ராஜாக்கமங்கலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.