திருப்பூர், ஜூலை 02 –
எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியே போகாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். திருப்புமுனை மாநாடு ம.தி.மு.க. கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ம.தி.மு.க.வின் சார்பில் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருச்சியில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இது
ம.தி.மு.க. இயக்க வரலாற்றில் மீண்டும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும்.
தி.மு.க.அரசை விமர்சித்தது இல்லை. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். இன்று வரை அரசை எதிர்த்து சிறிய ஆர்ப்பாட்டம் கூட நாங்கள் நடத்தியது இல்லை. அறிக்கை கொடுத்ததில்லை. இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்லியது இல்லை. கருத்துக்களை அறிக்கையாக கொடுத்திருப்பேனே தவிர, திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை.
வரும் தேர்தலில் ம.தி.மு.க. எத்தனை தொகுதிகள் கேட்கும் என்று நிருபர்கள் கேட்டபோது, துரை வைகோ 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். 10 அல்லது 12 இடம் கேட்கலாம். அது என்னுடைய முடிவு அல்ல. தலைமை எடுக்க வேண்டிய முடிவு என்று கூறியுள்ளார். நிர்வாகக்குழுவில் கூட்டணியில் இத்தனை இடங்கள் வேண்டும் என்று ஒருவார்த்தை கூட நான் பேசவில்லை.
ம.தி.மு.க. வெளியே போகாது. தேர்தலுக்கு 3, 4 மாதங்களுக்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது எங்களுக்கு அழைப்பு விடுத்ததும் அங்கே போய்
சொல்வோம். எந்த சூழ்நிலையிலும் தி.மு.க.கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியே போகாது.
அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ம.தி.மு.க.வை துச்சமாக மதித்து விமர்சித்து பேசுகிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருச்சி மாநாடு நடத்தப்படுகிறது.
பா.ஜனதா தலைதூக்க முடியாது. பா.ஜனதா, இந்துத்துவ சக்திகள் இந்த திராவிட இயக்க மண்ணில் தலை தூக்க முடியாது. சாராயத்தையும், மது பானத்தையும், கள்ளையும் எதிர்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.