ஈரோடு, ஜூலை 29 –
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (50). நகைப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி சகிலா தேவி (42). இவர்களது மகள் தானிய லட்சுமி (20). நாகேந்திரன் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பொன்நகரில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். இந்த நிலையில் நாகேந்திரனுக்கு வாய் பகுதியில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவர் மனமுடைந்தார். இந்நிலையில் மனைவி சகிலா தேவிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் இவர்களது மகள் தானிய லட்சுமிக்கும் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் கடந்த சில நாட்களாக சோகமாக காணப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் இரவில் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இறப்பதற்கு முன்னதாக தாங்கள் தற்கொலை செய்வது பற்றி உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். மேலும் நாகேந்திரன் எழுதியுள்ள உறுக்கமான கடிதத்தில் எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கடன் பிரச்சினையும் இல்லை. எங்களை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். எங்களின் இறுதிச்சடங்குக்காக கருங்கல்பாளையம் வீட்டில் ரூ. 25 ஆயிரம் வைத்துள்ளோம். அதை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.