தருமபுரி, ஆக.28:
மாவட்ட ஆட்சியர் உத்தரவு மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் பல்வேறு அசைவ உணவகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலை, பென்னாகரம் சாலை, ஓசூர்–சேலம் புறவழிச்சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
10 கிலோ பழைய இறைச்சி அழிப்பு
15-க்கும் மேற்பட்ட உணவகங்களில் நடைபெற்ற ஆய்வில், 3 உணவகங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சமைத்த பழைய தந்தூரி, சமைத்த கோழி இறைச்சி மற்றும் செயற்கை நிறமூட்டி கலந்த மசாலா தடவிய பச்சை இறைச்சி என சுமார் 10 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அப்புறப்படுத்தப்பட்டு கிருமிநாசினி ஊற்றி அழிக்கப்பட்டன.
மேலும், சில உணவகங்களில் இருந்து செயற்கை நிறமூட்டிகள், காலாவதியான பால் பாக்கெட்டுகள், பன்னீர் மற்றும் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட சோம்பு உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
ரூ.8,000 அபராதம்
விதிமுறைகளை மீறிய 5 உணவக உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.8,000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 3 உணவகங்களுக்கு தலா ரூ.2,000, 2 உணவகங்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், சில்லி சிக்கன், இஞ்சி–பூண்டு பேஸ்ட் மற்றும் சில்லி மசாலா பவுடர் ஆகியவை சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவகங்களில் சுகாதாரமற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தருமபுரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தெரிவித்தார்.



