உசிலம்பட்டி, ஆகஸ்ட் 9 –
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அபே ஆட்டோ மீது கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து. ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உசிலம்பட்டி அருகே அம்மட்டையன் பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு உச்சப்பட்டியைச் சேர்ந்த பிரியா கண்ணன் என்பவரது அபே ஆட்டோவில் உறவினர்கள் அழைத்து வந்தாக கூறப்படுகிறது. உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அபே ஆட்டோ மீது உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முன்பு தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அபே ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கிய சூழலில் ஆட்டோவில் பயணித்த அனைவரும் தூக்கி விடப்பட்டனர். இதில் ஆட்டோவில் சிகிச்சை பெற வந்த வீரம்மாள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்,
இலக்கியா, ரமேஷ், அபிராமி, நிவேதா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பிரியா
கண்ணன் என்ற 5 பேர் படுகாயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த வீரம்மாள் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.