ஈரோடு, செப். 1 –
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் ஈரோடு சம்பத் நகரில் 11 அடி உயரம் உள்ள வெற்றி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இது தவிர ஈரோட்டின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் சம்பத் நகருக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு இருந்து ஊர்வலம் மேளதாளம் முழங்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் 160 சிலைகள் கலந்து கொண்டன. அலங்கரிக்கப்பட்ட வீர பத்ரகாளி அம்மன் சிலையும் இந்த ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இதில் கலந்து கொண்ட சாக்லெட் விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்தது. மின்னொளியில் ஜொலித்தபடி சென்ற விநாயகர்களை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றை அடைந்தன. இதன் பிறகு காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் சி.கே. சரஸ்வதி எம்எல்ஏ, பொது செயலாளர் கார்த்திக், பொருளாளர் கோவிந்தராஜன், மாநில துணை தலைவர் சண்முகம் சுந்தரம், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் மற்றும் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் முரளி, ரமேஷ், விவேக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், கவின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



