ஈரோடு, அக். 6 –
தமிழ் நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஈரோடு சூரம்பட்டியில் மாவட்டத் தலைவர் மேசப்பன் தலைமையில் செயலாளர் மாரிமுத்து முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைத் தலைவர்கள் மதியழகன், செந்தில்குமார், இணை செயலாளர்கள் முத்துகிருஷ்ணன் வசந்த குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ரூ.1000 க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி சென்று பொருட்கள் வினியோகம் செய்வதில் சிரமங்கள் செலவுகள் கண்டறியப்பட்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டும். அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்களுக்கும் உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் கருணை ஓய்வூதியத்தை 5,000 ஆக உயர்த்த வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்பிறகு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.



