ஈரோடு, ஆக. 7-
ஈரோடு லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகே ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை சி.கே. சரஸ்வதி எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் வக்கீல் பழனிச்சாமி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் அக்னி ராஜேஷ், விவசாய அணி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், இளைஞரணி செயலாளர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.எம். செந்தில் கூறியதாவது: பவானி புறவழிச்சாலை மேம்பாலத்தின் அடியில் கட்டுமானத் திட்டங்கள் முடிந்த பின்னும் கல் மற்றும் மண் அகற்றப்படாமல் உள்ளது. இங்கு அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் நீர்வழி தடுப்பும் பாலத்தில் அதிர்வும் ஏற்பட்டுள்ளது. இதனால்
சுற்றியுள்ள மக்களின் உயிர் மற்றும் சொத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் அருகே உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதில் கொசுக்கள் அதிகமாக இருந்தது. இதைப்பார்த்த விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் அக்னி ராஜேஷ் அங்கு உள்ள கூலி தொழிலாளர்களை அழைத்து அந்த பள்ளத்தை மூட ஏற்பாடு செய்தார். அந்த பள்ளத்தில் சரஸ்வதி எம் எல் ஏ வும் மாவட்ட தலைவர் செந்திலும் மண்ணை போட்டு மூடினர்.