ஈரோடு, ஆக 7 –
11-வது தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி ஈரோடு மாவட்ட கைத்தறி துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி ஈரோட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளான இ. முத்ரா கடன் தொகை ஆணை மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை ஆணை இறந்த உறுப்பினரின் வாரிசுதாரருக்கு கோ ஆப்டெக்ஸ் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் திட்ட தொகைக்கான காசோலை மற்றும் கைத்தறி ஆதாரவு திட்டத்தின் கீழ் அச்சு ஓடி நாடா ஆகிய இனங்களின் கீழ் ரூ. 44 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள மூத்த நெசவாளர்களை பாராட்டும் வகையில் பொன்னாடை போர்த்தி கேடயம் மற்றும் ரொக்கப் பரிசுகளை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வி.சி. சந்திரகுமார் எம்எல்ஏ, மேயர் நகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட கைத்தறி துணி நூல் உதவி இயக்குனர் சரவணன் மற்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் பல கலந்து கொண்டனர். இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் படுக்கை விரிப்பு, தலையணை உறை, போர்வை, துண்டு, ஜமுக்காளம், காட்டன் சேலைகள், திரைச்சீலை மற்றும் பல்வேறு ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.