கன்னியாகுமரி, ஜூன் 30 –
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் உச்சகட்ட நிலையை அடைந்ததை தொடர்ந்து இரு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கியது. இதன் மூலம் 19 சிறப்பு விமானங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
அதன்படி ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 651 இந்திய மீனவர்கள் ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். மீனவர்களின் பாதுகாப்பு குறித்து தகவல்கள் ஏதும் இல்லாததால் அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப மத்திய வெளியுறவு அமைச்சகம் தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் முதற்கட்டமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் ஈரானின் இருந்து சிறப்பு விமானம் மூலம் பத்திரமாக டெல்லி வந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லியில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர்.
அவர்களை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வினய் குமார் மீனா வரவேற்றார். உடன் மீன் வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, மீன் வளத்துறை உதவி இயக்குனர் அஜித் ஸ்டாலின், மெரைன் எம்போஸ்மென்ட் ஆய்வாளர் சனல் குமார் ஆகியோர் வரவேற்று உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை வழங்கி தனி வாகனம் மூலம் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். சொந்த ஊர் திரும்பிய மகிழ்ச்சியில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துடன் தமிழக மீனவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.