தேனி, ஆகஸ்ட் 4 –
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட காமேகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அசன் குமார் (32) என்ற இளைஞர் அதே ஊரைச் சேர்ந்த தங்க ரமேஷ் (40) என்பவரின் மனைவியுடன் திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.
இதனால் தங்க ரமேஷ் அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் தங்க ரமேஷ் சென்றபோது எதிரே டிராக்டர் ஓட்டி வந்த அசன் குமார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியதில் தங்க ரமேஷ் கீழே விழுந்த போது மேலும் கட்டையால் தாக்கி படுகாயம் அடைய செய்துள்ளார். படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் அசன் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அசன் குமார் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. கொலை குற்றத்திற்காக அசன் குமார் என்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால மெய் காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.