நாகர்கோவில், பிப்ரவரி 11 –
ஜெயலலிதாவின் உற்ற தோழியாகவும், நிழலாகவும் இருந்து வந்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று வந்த பிறகு, அரசியலிருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். அதிமுக வுடன் இணைய ஆசைப்பட்டாலும், எடப்பாடி பழனிசாமியால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் 2026 தேர்தலில் தனது பலத்தை காட்ட வேண்டும் என்று சசிகலா விரும்புகிறார். எனவே சில மாதங்களாகவே தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இதனால் அமமுக தலைவர் தினகரனுக்கும், சசிகலாவுக்குமிடையே பிரச்சினைகளும் எழும்பியது.இந்நிலையில் தினகரனோ சொல்லிக் கொள்ளலாமல் ஓடோடி சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து விட்டார். இது சசிகலாவிற்கு மேலும் ஆத்திரத்தை கொடுத்துள்ளது.
தற்போது பலத்த ஆலோசனைக்கு பிறகு தினகரன் போனால் என்ன? எனது தனிப்பட்ட செல்வாக்கு என்ன என்பதை காட்ட வேண்டும் என்கிற முயற்சியில் சசிகலா இறங்கியிருப்பதாக தெரிகிறது. அதிமுகவுக்கு பக்க பலமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் என்னால் தான் வந்தது. எனவே முக்குலத்தோர் தொகுதிக்கு சென்று நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் யாரை வேண்டுமானாலும் என்னால் ஜெயிக்க வைக்க முடியும் என்று சசிகலா நம்புகிறார். அதற்காக தனது சகோதரர் திவாகரனிடம் கைவசம் இருக்கிற அண்ணா திராவிடர் கழகத்தை தனது தலைமையில் இயங்குவதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.
இந்நிலையில் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணி செயலாளராக இருக்கும் ஜெய்ஆனந்த், தவெக தலைவர் விஜயை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. 25 தொகுதிகள் வரையிலும் கேட்டதாகவும் தெரிகிறது.
ஆனால் சசிகலா இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்றால் அது சந்தேகம் தான் என்று சொல்லுகிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னம்மாவை அதிமுகவில் சேர்க்காமல் போனாலும், என்.டி.ஏ கூட்டணி சின்னம்மாவை கைவிடாது. அண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் தேசிய முற்போக்கு கூட்டணியில் சின்னம்மாவுக்கு 3 லிருந்து 5 தொகுதிகள் கண்டிப்பாக கிடைக்கும். தென்மாவட்டங்களில் சின்னம்மாவுக்கு ஆதரவு உள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.
தேசிய முற்போக்கு கூட்டணி நிராகரிக்கும் பட்சத்தில், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பிறகு, தனது செல்வாக்கை அதிக படுத்தி தவெக பக்கம் செல்லலாம் என்றும் அரசியல் கருத்தாளர்கள் தெரிவிக்கிறார்கள்.



