தக்கலை, ஜூலை 11 –
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிவர் விஜயன் (45). இவர் கடந்த 2006-ம் ஆண்டு 58 மாணவர்கள் 10 ஆசிரியருடன் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தார். பத்மநாபபுரம் அரண்மனையை பார்வையிட்டு வெளியே வரும்போது மாணவர்கள் அப்பகுதியில் ஐஸ் வாங்க சென்றனர். இதனை ஆசிரியர் விஜயன் தடுத்ததால் ஐஸ் வியாபாரி ஸ்ரீ ஹரி (27) என்பவர் இளநீர் கடையிலிருந்து அரிவாள் எடுத்து ஆசிரியர் விஜயனை வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு பத்மநாபபுரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2012-ம் ஆண்டு சாட்சிகள் விசாரணை முடிவுற்ற நிலையில் ஸ்ரீ ஹரி தலைமறைவாக இருந்ததால் கால தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீ ஹரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து ஆசிரியரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்திய ஸ்ரீ ஹரிக்கு 4 வருடம் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதவி அமர்வு நீதிபதி மாரியப்பன் நேற்று தீர்ப்பு அளித்தார்.