ஆந்திரப் பிரதேசம், அக்.28.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளை ஒட்டி ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கத்தால் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் அதி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அனகாபள்ளி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் 200 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 150 கி.மீ. வரை சூறைக்காற்று
புயலின் மையப்பகுதியில் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதுடன், இடையிடையே அதன் வேகம் 150 கி.மீ. வரை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. புயல் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் கனமழையும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
பல மாவட்டங்களில் வெள்ள அபாயம்
அனகாபள்ளி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, கோனசீமா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவிட 1.5 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து பாதிப்பு
பலத்த காற்றின் காரணமாக காக்கிநாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்கள் சரிந்தும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் போக்குவரத்து மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானச் சேவைகள் மற்றும் ரயில் சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
85 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு
புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் 290 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 85 ஆயிரம் பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, புயல் நிலவரம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


