மார்த்தாண்டம், செப். 30 –
அருமனை அருகே மாத்தூர் கோணத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி விஜயகுமாரி (41). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் +2, இரண்டாவது மகன் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். இரண்டாவது மகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அதனால் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கணவன் மனைவி பல்வேறு இடங்களில் ரூ. 30 லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் இரண்டு பேரும் அவதிப்பட்டு வந்துள்ளார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்தவர்கள் வந்து பணத்தை செலுத்துமாறு கண்டிப்புடன் கூறினார்களாம். இதனால் விஜயகுமாரி மன வேதனையில் இருந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். விஜயகுமார் இரண்டு மகன்கள் வீட்டின் ஹாலிலும், விஜயகுமாரி வீட்டில் உள்ளே ஒரு அறையிலும் தூங்கினார்கள். மூத்த மகன் இன்று காலை சுற்றுலா செல்வதாக இருந்தது. அவன் அதிகாலை சுமார் 2:30 மணி அளவில் எழுந்து தாய் படுத்திருந்த அறையில் சென்று அழைத்துள்ளார். அப்போது விஜயகுமாரி வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்கு போட்டு தொங்குவதை கண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் திரண்டு இது குறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



